logo
  • வணக்கம் நண்பர்களே!! நெமிரா நாவல்ஸ் உலகத்திற்கு உங்களை நட்புடன் வரவேற்கிறேன்! வாசித்து மகிழுங்கள்!!

மிருதன் 1

Naemira

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
193
Points
28
Location
india
மிருதன் 1

அன்று அக்டோபர் மாதத்தில் ஒருநாள், அதுவும் ஓர் இரவு வேளை. ஒருபக்கம் நட்சத்திரங்களையும் ஒருபக்கம் பிறைநிலவையும், கறுத்துக் கிடந்த கார்மேகம் மொத்தமாய் தன்னுள் சிறை வைத்திருக்க, மறுபக்கம் உயிரைப் பிடுங்கித் தின்னும் தோரணையில் இடி முழங்கிக் கொண்டிருந்தது.

“இப்போ போனா மழை வருமா, வராதா?” என தன்போக்கிலே பேசியபடி, ‘வீட்டிற்குச் செல்வோமா, வேண்டாமா?’ என யோசனையில் மூழ்கியிருந்த மேகாவிடம் வேகமாக வந்த அவளது தலைமை மருத்துவர்,

“மேகா, வீட்டுக்கு இன்னும் கிளம்பலையாமா?” என்றார்.

“இதோ கிளம்பிட்டேன் சார், மேகமா இருக்கு. அதான், மழை வருமான்னு பார்த்துட்டு இருக்கிறேன் சார்!” என்ற மேகாவிடம்,
“ஒரு உதவிமா!” என்றார் சிறு தயக்கத்துடன்.

“சொல்லுங்க சார்!” என அவள் ஆர்வத்துடன் கேட்க,

“ஒரு கேஸ் வந்திருக்குமா, முதலுதவி செய்யணும்.
ஆனால் எனக்கு இப்போ ஒரு சர்ஜரி இருக்கு. என்னால ஹாஸ்பிட்டலை விட்டு உடனே போக முடியாது. சோ, நீ போய் அட்டெண்ட் பண்ணணும்” என்றார்.

“ஓகே சார்!” என ஆர்வம்குறையா குரலில் கூறியவள், “சரி சார், அப்போ நான் கிளம்புறேன், எங்கே போகணும்?” என்றவளிடம்,
“என் கார்ல போம்மா, டிரைவர் உன்னை கூட்டிட்டு போயிட்டு, கூட்டிட்டு வருவாரு!”

“உங்களுக்கு எதுக்கு சார் சிரமம்? நானே போயிக்கிறேன். அட்ரஸ் மட்டும் சொல்லுங்க!”
“இல்லை, அந்த இடம் கொஞ்சம் தள்ளி இருக்கு. டிரைவர் கூட்டிட்டு போவாரு!” என்றவர், “எதுவா இருந்தாலும் எனக்கு கால் பண்ணுமா! அப்புறம், போயிட்டு வேலையை முடிச்சிட்டு வந்துட்டே இரு!” என்றவருக்கு மேகாவை அங்கே அனுப்புவதில் சிறு தயக்கம்தான்.

ஆனாலும் தவிர்க்க முடியாத சர்ஜரி இருப்பதாலும், மேகாவின் பயந்த சுபாவம் மற்றும் மென்மையான குணம் பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பதாலும், மேலும் மேகாவைத் தவிர வேறு யாரையும் அங்கு அனுப்பினால் ஏதும் பிரச்சனை வரக்கூடும் என்பதாலும், அவளை அரைமனதுடன் அங்கே அனுப்பினார்.

மேகாவும் நடக்கப்போகும் விபரீதம் அறியாமல் அவரது வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அவர் சொன்ன இடத்திற்கு காரில் வந்து இறங்கினாள்.
அது நகருக்கு மிகவும் ஒதுக்குப்புறமாக இருந்தது.

அந்த ஒற்றை கட்டிடத்தைத் தவிர ஒரு குடிசைவீடு கூட அங்கில்லை. சுற்றிலும் அடர்ந்த காடு, போதாக்குறைக்கு இடியின் மிரட்டல் என மேகாவை லேசாக பயம் சூழ்ந்து கொண்டது. அப்பொழுது கேட்டை திறந்து கொண்டு அவள் முன்பு துப்பாக்கி ஏந்திய காவலாளி ஒருவன் வந்தான்.

“டாக்டர் கனகராஜோட ஆள் தானே?” உணர்ச்சிகள் துடைத்த முகபாவத்துடன் கேட்டான்.

“ஆமா” அவனது உயரமான, பருமனான, இறுக்கமான தோற்றத்தைக் கண்டு ஆடிப்போனவளின் காற்றுக்குரல், காற்றில் கரைந்து போக தலை மட்டும் வேகமாக ஆடியது.
அவளது அடையாள அட்டையை வாங்கிச் சரிபார்த்தவன், அவளை உள்ளே அனுமதித்தான்.

அங்கே இருந்து மேகாவை அழைத்துச் சென்ற ஒருவன், ஒரு இருட்டறைக்கு அவளை அழைத்துச் சென்றான்.

அந்த இடத்தின் தோற்றமே அவளுக்கு வித்தியாசத்தையும் ஒருவித அச்சத்தையும் கொடுக்க, நடுக்கத்துடன் வந்தாள்.

அப்பொழுது அங்கே ஒரு மனிதன் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைச் சிறிதும் பொருட்படுத்தாமல், ஒருவன் தன் கால்களால் அவன் மார்பில் மிதித்துக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ந்த மேகா, ஓடிச்சென்று அவனைத் தடுக்க, கோபமுற்றவன் தன்னை அழைப்பது ஒரு பெண் என்பதை மறந்து அவளது இரு தோள்களையும் பற்றித் தூக்கி சுவருடன் சாய்த்தான்.

அவனது இந்த செய்கையில் அதிர்ந்த மேகா திகைத்துப்போனாள். அவனும் தான்! ஆனால் அரைநொடி தான்.

அவனிடம் இருந்து இப்படி ஒரு எதிர்வினையை எதிர்பார்க்காதவள் அவனது இந்த திடீர் செய்கையில் பதறினாள்.

அவனோ சுவரில் அவளைச் சாய்த்து தன் வலிய கரங்களால் அவளது இரு தோள்களையும் பிடித்து சிறை வைத்திருக்க, மூச்சுக்காற்று மோதிக்கொள்ளும் இடைவெளியில் அவளது பார்வை அவனைச் சந்தித்தது.

ஆறடி உயரம், ஆஜானுபாகுவான தோற்றம். ஜெல் இல்லாமலே பளபளத்த அடர்ந்த கருங்கேசம், அகன்ற நெற்றி, ஆளை எரிக்கும் கனல் விழிகள், கூர்மையான புருவங்கள், விடைத்திருந்த நேர் நாசி, அதற்குக் கீழே நுனியில் முறுக்கப்பட்ட அழகு மீசை, அளவான தாடி என கம்பீரமாக நின்றிருந்தான். ஆண் அழகன்தான்!

ஆனால்?
‘என்ன வார்த்தை சொல்வது?’ என யோசித்த அவள் மனதிடம், ‘அதான் அவன் முகத்திலேயே எழுதி ஒட்டியிருக்கிறதே, காட்டுமிராண்டி!’ மெல்ல அவளது மூளை எச்சரித்தது.

திகைப்பு சற்றும் குறையாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவளை விடுவித்தவன், சொடக்கு போட்டு அவளது கவனத்தை தன் பக்கம் ஈர்த்தான், அவளது ‘காட்டுமிராண்டி’
“யார் நீ?” அவனது கணீர்குரல் அவளை மிரட்டியது.

“டாக்டர் மேகவர்ஷினி” அவளது நா மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள, தன்பெயரையே சொல்லமுடியாமல் தடுமாறியபடி உளறினாள்.

“இங்கே என்ன பண்ணிட்டு இருக்க?” என வினவியவனின் கவனத்தை தன் வசமாக்கியது அவளது முகம்.

அழுந்தப் பிடித்தால் சிவந்துவிடும் வெள்ளை நிறத்தில் அழகாய் ஜொலித்த வட்டமுகம், அஞ்சனம் தீட்டாத பெரிய கருவிழிகள், செதுக்கி வைத்த நேர்நாசி, சாயம் பூசாமலே சிவந்திருந்த இதழ்கள், அழகாய் விரித்து விடப்பட்ட இடை தாண்டி வளர்ந்திருந்த நீண்ட குழல்! அவனது பார்வை அப்பாவையை விட்டு அகலவில்லை.

“டிரீட்மெண்ட் கொடுக்க வந்திருக்கேன்!” இதோடு நான்காவது முறை கூறிவிட்டாள். ஆனால் அது எதுவும் அவன் காதில் விழவே இல்லை. தன் பார்வையாலே அவளை விழுங்கிக் கொண்டிருந்தான்.

அவனது பார்வையின் வீச்சைக் கண்டவளின் இதயம் தறிகெட்ட குதிரையாக வேகமாக ஓடியது.

அப்பொழுது அவர்களிடம் வந்த அஷோக், “டாக்டர் கனகராஜ் அனுப்பினது நீங்கதானே?” என மேகாவிடம் வினவினான்.

“ஆமா” என்றாள்.

“அவரு ஏன் வரல?” காட்டுமிராண்டியின் கணீர்குரல் அவளிடம் கேள்வி கேட்டது.

“அது...” தெரிந்த பதில்தான், இருந்தாலும் அவனது குரலைக் கேட்ட மறுநொடி அவளது மனதிலிருந்து வந்த வார்த்தைகள் அனைத்தும் தொண்டைக்குள்ளே சூல் கொள்ள, ‘அது, அது’ தவிர வேறு எதுவும் பேச முடியாமல் திணறினாள்.

“அக்னி, அவருக்கு முக்கியமான சர்ஜரின்னு சொன்னார். வேற யாரையாவது அனுப்பட்டுமான்னு கேட்டார். நான்தான் அனுப்பச் சொன்னேன். அவங்களை டிரீட் பண்ண விடு!” என்று அஷோக் கூறியதும் அவளை விட்டு விலகிய அக்னி, தள்ளி நின்று சிகரெட்டை எடுத்து தன் வாயில் வைத்துப் புகைத்தபடி அவளை ஆராய்ந்தான்.

“இவருக்கு தலையில பெருசா அடிபட்டிருக்கு. இங்கே வச்சு டிரீட்மெண்ட் பண்ண முடியாது. என்னால முடிஞ்ச முதலுதவிய பண்ணிருக்கேன். எவ்வளவு சீக்கிரம் ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போகிறோமோ அவ்வளவு நல்லது. நான் ஆம்புலன்ஸுக்கு கால் பண்றேன்!” கண்களில் சிறு பதற்றத்துடன் அஷோக்கைப் பார்த்துக் கூறினாள். மறந்தும் அவளது பார்வை அக்னியைச் சந்திக்கவில்லை.

“அதெல்லாம் வேண்டாம்” அதே குரல், அவளை மிரட்டும் அதே குரல்! அவனேதான், உள்ளம் சொல்லியது திரும்பிப் பார்த்தாள்.

அவளுக்கு மிக அருகில் அக்னி தன் கண்களில் தீ தெறிக்க, உச்சக்கட்ட கோபத்தில் புகையை நன்கு இழுத்து முடித்துவிட்டு சிகரெட்டை காலில் போட்டு மிதித்தபடி நின்றிருந்தான். சிகரெட்டின் நாற்றத்தால் மேகாவுக்கு குமட்டிக்கொண்டு வர, பொறுக்க முடியாமல் முகம் சுளித்தாள்.

“முடியாதுன்னா என்ன சார் அர்த்தம்? ஹாஸ்பிட்டல் போகலைன்னா அவரு செத்துருவாரு!” பயம்தான். ஆனாலும் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தால், அக்னியைப் பார்ப்பதைத் தவிர்த்து அஷோக்கிடம் முறையிட்டாள்.

“நீ டாக்டர் தானே? உன்னால என்ன முடியுமோ அதைப் பண்ணு. அவன் இப்போ பேசணும், அதுக்கு என்ன பண்ணணுமோ அதை மட்டும் பண்ணு!” என்றான் அக்னிதீரன். இல்லை கட்டளையிட்டான்.

அவனது அனல் வீசும் பார்வையைக் கண்டதும் நடுங்கியவள், “ஆனா சார், சரியான டிரீட்மெண்ட் குடுக்கலைனா ரொம்ப கஷ்டம்” திக்கித் திணறினாள்.

“சரி, அப்போ சரியான டிரீட்மெண்ட் குடுங்க, சிம்பிள்” என்றான் அவளை இன்னும் நெருங்கியபடி. அவன் நெருங்கியதும் மேகாவின் பதட்டம் மேலும் அதிகரிக்க, அவளது உடல் வெடவெடவென்று நடுங்கியது.

“சீக்கிரமா டிரீட்மெண்ட் பாரு!” அதட்டினான்.

“இதோ பார்க்கிறேன்” தலையையும் சேர்த்து அசைத்தாள். மேகாவின் பதட்டம் கொஞ்சமும் குறையவில்லை.

இன்னமும் உடல் வெடவெடவென்று நடுங்கிக் கொண்டுதான் இருந்தது.

“இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?” காட்டுமிராண்டி கண்களை உருட்டினான்.

“டிரீட்மெண்ட் குடுத்துட்டு தான் சார் இருக்கிறேன். இதோ இப்போ முடிஞ்சிரும்” பயத்தில் உளற முடியாமல் தடுமாறினாள்.

“ம்ம், சீக்கிரம்” மேகாவின் இதயம், ‘டம் டம்’ என வேகமாக அடித்துக் கொண்டது. அவளது பயம் கண்டு உள்ளுக்குள் ரசித்தவன் வெளியே முறைத்தான்.

“ஆச்சா?” வேண்டுமென்றே மேலும் மேலும் அவளை கலவரப்படுத்தினான்.

“ஹான்!” என்றவளுக்குக் கரங்கள் மோசமாய் நடுங்க, மிகவும் சிரமப்பட்டு மருந்தை சிரஞ்சில் ஏற்றினாள்.

“ஏய்! என்ன பண்ற?” சீறியபடி அவளை நெருங்கினான். பார்வையாலே அச்சுறுத்தினான்.

“மயக்க ஊசி போடணும், அவர் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்” பதில் சொல்ல முடியவில்லை மூச்சடைத்தது. இதயம், ‘டமார் டமார்’ என்று அடித்துக்கொள்ள, ‘கிடுகிடு’ என்று மொத்த உடம்பும் ஆடியது.

“யாரைக் கேட்டு இதெல்லாம் பண்ற?” மேகாவிடம் அக்னி கத்தினான்.

“அக்னி, அவங்களை டிரீட்மெண்ட் பார்க்க விடு!” என்று அஷோக் கூற,
“நீ வாய மூடு!” எனச் சட்டென்று இவளிடம் இருந்து அவனிடம் பாய்ந்தவன், அஷோக்கை அடக்கிவிட்டு அவளிடம் திரும்பி, “ஏய், உன் ஆட்டத்தைக் கொஞ்சம் நிறுத்து!” அவளது நடுங்கும் உடலை எரிச்சலுடன் பார்த்தபடி கத்தினான்.

“ஹாங், அது” ஆடிப்போனவள் முயன்று தன் நடுக்கத்தை நிறுத்தினாள்.

“மயக்க மருந்தெல்லாம் போட வேண்டாம்” எச்சரித்தான்.

“அப்போ இதை என்ன பண்ணட்டும்?” பயத்தில் அவனிடமே கேட்டாள்.

“ஹான், உனக்குக் குத்திக்கோ!” சீறினான்.

பொம்மையைப் போலத் தலையை ஆட்டியவள். அவன் பார்த்த தீ பார்வையில் பயந்து போய் தன் கையிலே குத்திக் கொண்டாள்.

அவன் அதிசயமாக அவளைப் பார்க்க, மெல்ல மெல்ல தன் கண்கள் சொருகத் தரையில் விழப்போனாள் மேகா.

ஆனால் அக்னிதீரனின் முரட்டுக் கரங்கள் அவளை தாங்கிப் பிடித்துக் கொண்டது.

சில மணிநேரம் கழித்து கண் திறந்தவள், முதலில் பார்த்தது அவளை நோக்கி நடந்து வரும் அரக்கனைத் தான். இல்லை இல்லை, அக்னிதீரனைத் தான்.

‘டமார் டமார்’ என அவளது இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. முகமெல்லாம் சூடாகி நா வறண்டு மேனி சில்லிட்டது. அவனுடைய பார்வை ஈட்டி போல அவளைத் துளைத்து ஊடுருவி அவளது மனதைப் படிக்க முயன்றது. இதோ அருகில் நெருங்கி விட்டான். ‘டம் டம்’ இதயம் இன்னும் வேகமாய் துடித்தது. மீண்டும் உடலில் நடுக்கம் பிறந்தது.

“எப்படி இருக்கு?” அக்கறையான கேள்விதான். ஆனால் அதில்கூட அன்பு இல்லை, அதிகாரம் தான் மேலோங்கி இருந்தது. அவன் கேட்டதில் முதுகுத்தண்டு சில்லிட, மிரண்டு போனாள்.

அவனுடைய பார்வை, அவள் முகத்தைத் தெளிவாய் அளந்தது. மிரண்ட விழிகள், துடிக்கும் அதரங்கள், பயத்தில் கன்றிச் சிவந்து போன வதனம். தன் கண்களை இறுக்கமாக மூடி தலையை உலுக்கிக்கொண்டான் அக்னிதீரன்.

அவள் முகத்தில் அப்பட்டமாய் தெரியும் பயம் கண்டு, ‘ப்ச்’ எரிச்சல் அடைந்தவன், ஆழமாக மூச்செடுத்து வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டான். அவன் சென்றதும், ‘உஸ் புஸ்’ என்று தன் மூச்சை வெளியிட்டவளுக்கு அப்பொழுது தான் மனம் ஆசுவாசம் அடைந்தது.

அக்னி சென்றதும் அங்கு வந்த அசோக், அவளிடம் நலம் விசாரித்துக் கொண்டிருக்க அப்பொழுது ஒருவனின் கதறும் குரல் அவளது செவியை எட்ட, அஷோக்குடன் குரல் வந்த திசை நோக்கிச் சென்றாள்.

அங்கே அக்னி அடிபட்ட அதே நபரைப் போட்டு அடிப்பதைப் பார்த்து நடுங்கி, தன் கண்முன்னே ஒருவனின் உயிர் போவதைக் கண்டு பொறுக்க முடியாமல், “விடுங்க சார்! இப்படி அடிச்சீங்கன்னா, அவர் செத்தே போயிருவாரு” என அக்னியின் வலுவான புஜத்தைப் பிடித்துத் தடுக்கப் பார்த்தாள்.

“கேட்டியா ரகு! இன்னும் ஒரு அடி அடிச்சா, உன் உடம்புல உயிர் இருக்காதாம். யார் சொல்லி இப்படி பண்ணுன?” தன் கண்களில் கோபத்தீ தெறிக்க, அவனது காயம்பட்ட தோள்களை இறுக்கமாகப் பிடித்து உலுக்கினான்.

“கிரண் பாஸ்கர்” என்று அவன் சொல்லவும், “கிரண்!” எனப் பயங்கரமாகக் கத்திய அக்னி, ரகுவை ரத்தம் வெளியே தெறிக்க அடித்தான்.

“அவன் சொன்னா, சோறுபோட்ட எனக்கு, நீ துரோகம் பண்ணுவியாடா?” என தன் முதுகில் சொருகியிருந்த பிஸ்டலை எடுத்தான்.

ஒரு கையில் பிஸ்டல், முகத்தில் ரத்தக்கறை என்று கொலைவெறியுடன் ராட்சசனைப் போலக் காட்சியளித்த அக்னியைப் பார்த்த மேகாவுக்கு பயத்தில் இதயம் நின்று துடித்தது.

உடல் வலுவிழந்து தலை தொங்கிக் கிடந்த ரகுவின் தலையில் துப்பாக்கியைப் பார்த்து மிகவும் பதறியவள் ஒரு உயிரைக் காப்பாற்றும் பொருட்டு, “விடுங்க சார், இவரைக் கொலை பண்ணத்தான் என்னை டிரீட்மெண்ட் பார்க்க சொன்னீங்களா? உயிர்னா அவ்வளவு சுலபமா போச்சா?” என ஆதங்கத்துடன் அக்னியின் கையை பிடித்தாள் மேகா.


அதீத ஆத்திரத்தில் அவளை வெறித்தான், அவன் அக்னிதீரன்!

 
Last edited:

Author: Naemira
Article Title: மிருதன் 1
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Dec 16, 2024
Messages
45
Points
18
Location
Ariyalur
ஆல்ரெடி படிச்சிருக்கேன் சூப்பர் ஸ்டோரி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 

Naemira

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
193
Points
28
Location
india
ஆல்ரெடி படிச்சிருக்கேன் சூப்பர் ஸ்டோரி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Thank u so much dear❤️
 
Top